இந்திய வரலாற்றில் மிகவும் சவாலான வழக்குகளில் ஒன்றாக கருதப்பட்ட அயோத்தி வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் சிறந்த முறையில் தீர்ப்பு வழங்கியதற்காக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு, சக நீதிபதிகள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். அசாமில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரஞ்சன் கோகாய் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியும், அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றிருந்தவருமான எஸ்.ஏ.போப்டே, ரஞ்சன் கோகாய் மிகுந்த உறுதிப்பாடு கொண்டவராக இருந்ததாக தெரிவித்தார்.
இதைப்போல மற்றொரு நீதிபதியான அருண் குமார் மிஸ்ரா கூறுகையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு ஒரு அற்புதமான சாதனை என வர்ணித்தார். மேலும் முடியாததையும் ரஞ்சன் கோகாய் நிகழ்த்தி காட்டியிருப்பதாகவும் தெரிவித்தார். அரசியல் சாசன அமர்வில் இருந்த அனைத்து நீதிபதிகளும் ஒருமித்த குரலில் தீர்ப்பு அளித்திருப்பது வரலாற்றிலேயே அரிய நிகழ்வு எனக்கூறிய நீதிபதி ஸ்ரீபாதி ரவீந்திர பட், இதற்கு முன் அமெரிக்காவில் கறுப்பின பாகுபாட்டை நீக்குவதில்தான் இதுபோன்ற நிகழ்வு நடந்திருப்பதாகவும் கூறினார். எனினும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஞ்சன் கோகாய், அயோத்தி தீர்ப்பு குறித்து எதுவும் கூறவில்லை.