வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் குடியரசுத்தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 708- லிருந்து 700 ஆக குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24- ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னர், புதிய குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், குடியரசுத்தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்கு மதிப்பு குறையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பொதுவாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் குடியரசுத்தலைவர் தேர்தலில் ஒரு உறுப்பினரின் வாக்கு மதிப்பிடப்படுகிறது. தற்போது லடாக் மற்றும் ஜம்மு ,காஷ்மீரில் சட்டமன்றங்கள் இல்லாததால் குடியரசுத்தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு குறைய வாய்ப்பிருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த 2019- ஆம் ஆண்டு லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுவதற்கு முன்னர், ஜம்மு காஷ்மீர் 83 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.