இந்தியா முழுவதும் இன்று (01.07.2021) தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகை தற்போது அச்சுறுத்திவரும் கரோனா தொற்றிலிருந்து காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என அனைத்து முன்களப் பணியாளர்களும் தங்கள் பணி செய்துவந்தாலும், மருத்துவர்கள் தினமும் தங்கள் பணி நேரம் முழுக்க கரோனா தொற்று பாதித்தவர்களுடனே இருந்து தங்கள் பணியைச் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், ‘ஹிரண்யா மருத்துவ சேவை’களுடன் இணைந்து ‘ரெலா மருத்துவமனை’ ஒரு பொது விழிப்புணர்வு முயற்சியாக ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக பேசிய ரேலா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் தீபா ஸ்ரீ, “அனைவரும் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி போட வேண்டும். தங்களைக் காப்பாற்றிக்கொள்வது மட்டுமல்லாமல், தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் காப்பாற்ற வேண்டும். இந்த நோய்த் தொற்றைப் போக்க, நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்க வேண்டும். எந்தவொரு சாமானியனும் ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கு செய்யக்கூடிய மிகப்பெரிய பங்களிப்பாக இது இருக்கும். இது மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல் மருத்துவரின் வாழ்க்கையையும் கூட காப்பாற்றும்.
டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு, எல்லா நேரங்களிலும் உங்களைக் கவனித்துக்கொள்வதற்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்ற உறுதிமொழியை டாக்டர்கள் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். நன்றியுணர்வின் அடையாளமாக உங்களிடமிருந்து முகக்கவசம் எனும் விஷயத்தை மட்டுமே எதிர்பார்க்கிறோம். உங்கள் உயிரைக் காப்பாற்ற தடுப்பூசி போடுகிறோம்” என்று ரேலா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் தீபா ஸ்ரீ, Head of the Department of Interventional Radiology கூறினார்.
தற்போது வெளியாகியிருக்கும் இப்பாடலை, செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழக மருத்துவ மாணவியும் பிரபல பாடகியுமான சிங்கப்பூர் ஹிரண்யா, தன் குரலில் பாடியுள்ளார். ஹிரண்யா பாடிய ஆடியோவை அழகாக சித்தரிக்கும் ரெலா மருத்துவமனை மருத்துவர்களின் நடன காட்சிகளுடன் இந்த வீடியோ ஆல்பம் ஒரு கூட்டு முயற்சியாக வெளிவந்து இணையத்தில் வைரலாகிவருகிறது.