ரிசர்வ் வங்கி "BENCHMARKING INDIA'S PAYMENT SYSTEMS" என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் ஏடிஎம் பயன்பாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஏடிஎம்களில் பயன்பாடுகளை ஒப்பிட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் தான் மிக குறைந்த அளவிலான பணம் ஏடிஎம்களில் எடுக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியாவில் 2017 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2019 ஆம் ஆண்டு ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2017- ஆம் ஆண்டு இந்தியாவில் 2,22,300 ஏடிஎம்கள் இருந்தன.
ஆனால் தற்போது ஏடிஎம்களின் எண்ணிக்கை 2,21,703ஆக குறைந்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் சுமார் 597 ஏடிஎம்கள் குறைந்துள்ளது என்பது ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மேலும் ஏடிஎம்களில் சரியாக பணம் நிரப்பாததும், ஏடிஎம் இயந்திரத்தின் செயல்பாடுகளும் ஒரு காரணம் ஆகும். அதே போல் இந்தியாவில் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனைகளை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் ஏடிஎம்களின் செயல்பாடு குறைந்து வர மற்றொரு காரணம் ஆகும். பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது புதிய ஏடிஎம்கள் அமைப்பதில் சீனாவிற்கு அடுத்தப்படியாக இந்தியா உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.