வட மாநிலங்களில் குளிர் வாட்டிவதைத்து வரும் நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பல கோவில்களில் சாமி சிலைகளுக்கு கம்பளி உடைகள் போர்த்தப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது, இதன்காரணமாக மக்கள் கடும் குளிரினால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பல கோவில்களில் சாமி சிலைகளை குளிரிலிருந்து காக்கும் பொருட்டு கம்பளி உடைகள் போர்த்தப்பட்டுள்ளது. வாரணாசியில் உள்ள படா கணேஷ் கோவில், மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் உள்ள பல்வேறு கோயில்கள் ஆகியவற்றில் சாமி சிலைகளுக்கு கம்பளி ஸ்வெட்டர்ஸ் மற்றும் சால்வைகள் போர்த்தப்படுகின்றன. அதேபோல அயோத்தியில் உள்ள ராம் லல்லா சிலையும் ஒரு போர்வையால் மூடப்பட்டிருக்கிறது. மேலும், சிலை திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளதால், காற்றைச் சூடாக வைத்திருக்க அங்கு ஒரு ஹீட் புளோயர் (Heat Blower) நிறுவப்பட்டுள்ளது.
இப்படி கோவில்களில் சாமி சிலைகளுக்கு கம்பளி ஆடைகள் போர்த்தப்பட்டுள்ளது குறித்து பேசிய ஆச்சார்யா சமீர் உபாத்யாயா, "கடவுள் சிலைகள் ‘பிராண் பிரதிஷ்டா’ என்ற பெயரில் கோயில் எழுந்தருளல் செய்யப்பட்ட பிறகு அங்கிருக்கும் கடவுள் சிலைக்கு உயிர் இருப்பதாகவே நம்பப்படுகிறது. எனவே இங்கு நிலவும் வானிலை மாறுபாடுகளால் அவரது உடல்நலன் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதால் அவர் இவ்விதமாகப் பாதுகாக்கப்படுகிறார்" என்று தெரிவித்தார்.