பிரதமர் மோடி, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பல அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் விவரங்கள் அடங்கிய கணினிகளிலிருந்து ஏராளமான தகவல்கள் திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள தேசிய தகவல் மையத்தில் பிரதமர் மோடி, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த மாதத்தின் தொடக்கத்தில், இந்த மையத்தின் கணினிகள் முடக்கப்பட்டு, பலரது தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லி காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளின் விவரங்கள் அடங்கிய கணினிகளிலிருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
இந்த மையம்தான் மத்திய அரசின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பாதுகாத்து வருகிறது. எத்தனையோ பாதுகாப்பு வளையங்கள் இருந்தும் இந்த தகவல்கள் திருடு போயுள்ளன. இதுதொடர்பாக அந்த மையத்தில் பணிபுரியும் ஊழியரிடம் இருந்து புகார் வந்ததும், இதுதொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டுளோம். பெங்களூருவில் இருக்கும் அமெரிக்க நிறுவனத்திலிருந்து தேசிய தகவல் மையத்திற்கு இ மெயில் வந்துள்ளது. அந்த இ-மெயிலை திறக்கும்போது, தேசிய தகவல் மையத்தின் தகவல்கள் அனைத்தும் அந்த இ-மெயிலுக்கு சென்றுள்ளது. இ-மெயில் ஐபி முகவரி பெங்களூருவில் இருந்துதான் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.