Skip to main content

இனம் தாண்டிய அன்பு பிணைப்பைப் பிரித்த சட்டம்!

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

Uttarpradesh sarus crane arif kahan

 

உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஆரிப் கான் குர்ஜர். இவர் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு தனது வயலில் உத்தரப்பிரதேசம் மாநிலப் பறவையான சாரஸ் கொக்கு ஒன்று அடிப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதனை மீட்டு அதற்கு சிகிச்சை அளித்து அதனை பாதுகாத்தார். பின் உடல் நலம் குணமான பிறகும் சாரஸ் கொக்கு, தன் உயிரை காப்பாற்றி தக்க சமயத்தில் உதவி செய்த விவசாயி கான் குர்ஜரை விட்டு பிரியாமல் அன்பால் பிணைந்து அவருடனே வாழ்ந்து வந்தது. அவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போதும் கூட அவருடனையே சாரஸ் பறந்து செல்வது சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆனது. 

 

இந்த அன்பு பிணைப்பை பார்க்க அக்கம் பக்கம் இருந்தவர்களும் விவசாயி கான் குர்ஜர் வீட்டிற்கு வந்து சாரஸ் கொக்கை பார்த்துவிட்டு சென்றனர். இந்த விவரம் அறிந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், விவசாயி கான் குர்ஜர் வீட்டிற்கு நேரில் சென்று கான் குர்ஜர் - சாரஸ் இடையான அன்பு பிணைப்பை கண்டு, அவரிடம் உரையாடிவிட்டு சென்றார். 

 

Uttarpradesh sarus crane arif kahan

 

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலப் பறவையான சாரஸ் கொக்கு வன உயிரியல் பறவை அதனை வீட்டில் வளர்க்கக்கூடாது என அம்மாநில வனத்துறை அதிகாரிகள் விவசாயி கான் குர்ஜரிடம் இருந்து சாரஸை பிரித்து ரேபரேலியில் உள்ள சமஸ்புர் பறவைகள் சரணாலயத்தில் விட்டனர். மேலும், சாரஸ் கொக்கு இயற்கை சூழலில் தான் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் விளக்கம் அளித்தனர். 

 

அன்பால் கட்டப்பட்ட சாரஸ் கொக்கை விவசாயி கான் குர்ஜரை விட்டுப் பிரித்தது குறித்து பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். 

 

Uttarpradesh sarus crane arif kahan

 

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது; “பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்ட அந்தப் பறவையை காணவில்லை. பறவை விஷயத்தில் மாநில அரசு காட்டும் இந்த அலட்சியப்போக்கு முக்கியமாக பேசப்பட வேண்டியது. பிரதமர் இல்லத்தில் உள்ள மயில்களை எடுத்துச் செல்ல எந்த அதிகாரிக்காவது தைரியம் உள்ளதா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

அதேபோல், சாரஸ் கொக்கை பரமாரித்து வந்த ஆரிப் கான் குர்ஜர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அம்மாநில அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், சாரஸ் கொக்கை ஓராண்டாக வளர்த்து வந்தது தொடர்பாக வரும் ஏப்ரல் 4ம் தேதி கவுரிகஞ்ச் கோட்ட வன அதிகாரி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஆரிப் கான் குர்ஜருக்கு வனத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்