உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்குத் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்திவருகிறார்.
உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் நேற்று காலை ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவு காரணமாக தெலலிங்கா ஆற்றில் திடீரென கடுமையான நீர்வரத்து ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100 முதல் 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.
இதுவரை அங்கு 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வுக்குழு, கண்காணிப்புப் பணிகளுக்காக உத்தராகண்ட் விரைந்துள்ளது. அங்கு மீட்புப் பணிகள் இரண்டாவது நாளாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பாஜ.க.வின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையில் வெள்ளப் பாதிப்புகள் குறித்தும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்திவருவதாக தகவல் கூறுகின்றன.
சாமோலியில் வெள்ள மீட்புப் பணிகளுக்காக, ஏற்கனவே ரூபாய் 20 கோடியை உத்தரகாண்ட் அரசு விடுவித்தது குறிப்பிடத்தக்கது.