கரோனா ஒழிப்பு நடவடிக்கையாக, தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், மார்ச் 1 ஆம் தேதியிலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயது மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது.
மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பலர் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று (மார்ச் 2) மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ராஜ்நாத் சிங், ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (03.03.2021) இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.