மலையாளம் மொழி பேசும் கேரளா மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் நாளை கொண்டாப்படுகிறது. இதையொட்டி கேரளாவில் விழாக் கோலம் பூண்டுள்ளது. அதேபோல் குமரி மாவட்டத்திலும் ஒணம் பண்டிகை ஜாதி, மதம், அரசியல் வேறுபாடியின்றி கொண்டாடப்படுகிறது.
கேரளாவில்; கடந்த 2-ம் தேதி அத்தப்பூ கோலத்துடன் தொடங்கிய ஓணம் விழா வீடுகள், கோவில்கள், அரசு மற்றும் தனியார்கள் அலுவலகங்களில் அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடி வருகிறார்கள். மேலும் பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மாவேலி மன்னன் வேடமிட்டும் திருவாதிரை களி நடனம் ஆடியும் ஆடிப்பாடி மகிழ்கின்றனர். இதேபோல் அத்தப்பூ கோலப்போட்டி, ஒணப்பந்து போட்டிகளையும் நடத்துகின்றனர். இதேபோல் வீடுகளில் ஊஞ்சல்கள் கட்டி அதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உட்கார்ந்து ஆடிப்பாடுகிறார்கள்.
நாளை நடைபெறும் ஓணம் பண்டிகையையொட்டி நேற்று முதல் கேரளாவில் அரசு சார்பில் திருவனந்தபுரத்தில் தலைமைசெயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் மின் விளக்குகளால் அலங்காரிக்கப்பட்டுள்ளன. மேலும் வெள்ளையம்பலத்தில் இருந்து கிழக்கே கோட்டை வரை ரோடுகளின் இரு பக்கங்களிலும் மின்சார வாரியம் சார்பில் விதவிதமாக கண்ணை கவரும் வகையில் மின்விளக்குகள் அலங்காரிக்கப்பட்டுள்ளன. இதை இரவு மக்கள் குடும்பம் குடும்பமாக உறவினர்களுடன் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.
குமரிமாவட்டத்தில் பத்மனாபபுரத்தில் உள்ள கேரளா அரசுக்கு சொந்தமான அரண்மனையில் நேற்று முதல் ஓணம் விழா துவங்கியது. இந்த விழாவை பத்மனாபபுரம் சப்-கலெக்டர் சரண்யா அரி துவங்கி வைத்தார். பின்னர் அங்கு போடப்பட்டியிருந்த அத்தப்பூகோலம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து அரண்மனை ஊழியர்களுக்கான பிஸ்கெட் கடித்தல், செயர் சுற்றுதல், பலூன் உடைத்தல், முறுக்கு கடித்தல், வடம் இழுத்தல் போட்டிகளும் ஆண்களுக்கு சாரி உடுத்தல், கண்ணை கட்டி கொண்டு சுந்தரி பெண்களுக்கு பொட்டு வைத்தல் போட்டிகளும் நடந்தது.
பின்னர் மதியம் ஓண விருந்து நடந்தது. இதே போல் குமரி மாவட்டத்திலும் திரும்பிய பக்கமெல்லாம் ஓணம் பண்டிகை திருவிழா கலைக்கட்டியுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகள் கேரளா பாரம்பரிய உடையணிந்து அத்தப்பூ கோலமிட்டும் ஓண ஊஞ்சாலாடியும் கொண்டாடி வருகிறார்கள்.
ஓணம் பண்டிகையொட்டி நாளை குமரி, சென்னை, கோவை மாவட்டங்களுக்கு உள்ளுர் விடுமுறை விடப்பட்டுள்ளது.