இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி சந்திரயான்- 2 விண்கலம், ஜிஎஸ்எல்வி மார்க்- 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில் சந்திராயன் 2 விண்கல திட்டத்தின் முக்கிய நிகழ்வான "விக்ரம் லேண்டர்" நிலவின் தென் துருவ பகுதியில் இன்று அதிகாலை 01.30 மணிக்கு தரையிறங்க உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
சந்திரயான்-2 நிலவில் கால் பதிக்கும் சரித்திர நிகழ்வை தேசம் முழுவதும் எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கிறது. சாதனையை நிகழ்த்தும் பட்சத்தில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற இருக்கிறது. இந்த நிகழ்வை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.
இதனிடையே சந்திரயான்- 2 தரையிறங்கும் சிறப்பான தருணத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ட்விட்டரில் இந்திய அளவில் "சந்திரயான்- 2" ட்ரெண்ட் ஆகி வருகிறது.