மத்திய பல்கலைக்கழத்தில் சேர மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட நிலையில் எம்.பி வெங்கடேசன் முயற்சியால் 7 மணி நேரத்தில் மாற்றப்பட்டுள்ளது.
பதினெட்டாங்குடி கிராமத்தை சேர்ந்த லோகேஸ்வர் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்திருந்த நிலையில் நுழைவுத்தேர்வு எழுத லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இதை எம்.பி சு.வெங்கடேசனிடம் மாணவர் முறையிட மாணவருக்கான தேர்வு மையத்தை தமிழகத்திற்கு மாற்றித்தரும் படி மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்திக்கு சு.வெங்கடேசன் கடிதம் எழுதினார். இதனை தொடர்ந்து 7 மணி நேரத்தில் மாணவருக்கு மதுரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுத தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன் "தமிழகத்தில் உள்ள ஒரே மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரில் உள்ளது. அதற்கு தேர்வு எழுத தேர்வு மையம் லட்சத்தீவில் போடுவது, மாற்றுத்திறனாளிகளுக்கு மும்பையில் தேர்வு மையம் போடுவது இதையெல்லாம் உடனுக்குடன் தலையிட்டு சரிசெய்கிறோம்.
மத்திய அரசு மற்றும் தேர்வு நடத்தும் துறைகள், இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதும் போது தங்களுக்கு அருகில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்களின் மீது தேர்வு நடத்துகிறவர்கள் மனோரீதியான யுத்தத்தை தொடர்ச்சியாக நடத்துகிறார்கள். அதே போல நாடு முழுதும் பொது நுழைவுத்தேர்வு என்ற கொள்கையே முற்றிலும் தவறான விஷயம். அந்தந்த மாகாணத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்படவேண்டும்" எனக் கூறினார்.