நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு உட்பட 22 மாநிலங்களுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்கிடையே, மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளாவில், வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய இன்று (04-04-24) கடைசி நாள் ஆகும்.
இதனால், காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார். அதில், ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனுவுடன் அளித்த பிரமாண பத்திரத்தின்படி, அவருடைய சொத்து மதிப்பு விவரங்கள் தெரியவந்துள்ளது.
அதன்படி, ராகுல் காந்தி, பங்கு சந்தை வர்த்தகத்தில் ரூ.4.3 கோடி அளவுக்கு முதலீடு செய்திருப்பதாகவும், மியூச்சுவல் பண்டில் ரூ.3.81 கோடிக்கு வைப்பு நிதியாக வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவருடைய வங்கிக் கணக்கில் ரூ.26.25 லட்சம் இருப்பதாகவும், கையிருப்பாக ரூ.55,000 இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.9.24 கோடி எனவும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.11.15 கோடி எனவும் தெரிவித்துள்ளார்.
ரூ.9 கோடி மதிப்பில் குருகிராமத்தில் சொந்த அலுவலகம் இருப்பதாகவும், தனது சகோதரியுடன் இணைந்து விவசாய நிலம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு சொந்தமாக கார், அடுக்குமாடி குடியிருப்பு கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்நிலையில், ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.