பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், சதானந்த கவுடா, தாவர்சந்த் கெலாட், ரமேஷ் பொக்ரியால், ஹர்ஷ்வர்தன், சந்தோஷ் குமார் கங்குவார், பாபுல் சுப்ரியோ, தாத்ரே சஞ்சய் ஷாம்ராவ், ரத்தன்லால் கட்டாரியா, பிரதாப் சந்திர சாரங்கி, தேபா ஸ்ரீ சவுத்ரி ஆகியோர் தங்கள் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மத்திய அமைச்சர்களின் அடுத்தடுத்து ராஜினாமாவால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 12 மத்திய அமைச்சர்கள் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மத்திய அமைச்சர்களின் ராஜினாமாவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன் உள்பட 43 பேர் மத்திய அமைச்சர்களாக இன்று (07/07/2021) பதவியேற்க உள்ளனர். இவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.