மத்திய நீதித்துறை இணை அமைச்சராக இருந்து வருபவர் சத்ய பால் சிங் பாகேல். இவர் உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹல் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
இதனையொட்டி நேற்று அவர் கர்ஹல் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் சத்ய பால் சிங் பாகேல், தனது கார் மீது சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த தாக்குதலில் தனக்கு காயம் ஏற்பட்டதாகவும், துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சத்ய பால் சிங் பாகேல் போலீஸாரிடம் புகாரும் அளித்துள்ளார். இதற்கிடையே பாஜக, சத்ய பால் சிங் பாகேல் மீது நடைபெற்றதாகக் கூறப்படும் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் அவருக்கு z+ பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.