மத்திய பிரதேச மாநிலம் தாமோ தொகுதியின் மக்களவை உறுப்பினர் பிரஹலாத் படேல், தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தனிப்பொறுப்புடன் கூடிய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக உள்ளார். இவரின் மகன் பிரபால் படேல் (26 வயது) உள்ளிட்ட 7 பேர் திங்கள் அன்று நடந்த அடிதடி சம்பவத்தில் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரபால் படேலுக்கு ஒருநாள் விசாரணைக்காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்ற 6 பேரும் ஜுலை 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
திங்கள்கிழமை அன்று இரவு ஹிமான்சு ரதோர் மற்றும் ராகுல் ராஜ்புத் ஆகியோர் திருமண வீட்டில் இருந்து திரும்பி வரும் போது, பிரபால் படேல் உள்ளிட்ட 6 பேர் அவர்களை வழி மறித்து சண்டையிட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபால் படேலின் சகோதரரும் பாஜக எம்.எல்.ஏ.வுமான ஜலம் சிங் படேலின் மகன் மோனு படேல், தன்னுடைய அலுவலகத்துக்கு ஹிமான்சு மற்றும் ராகுலை அழைத்துச் சென்று கொலை வெறியுடன் தாக்கியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் பிரபால் படேல் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்ட விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.