பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் பவன் மேத்தா கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 'பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய சட்டப்பிரிவுகளை பின்பற்றி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது எப்.ஐ.ஆர்.- யை பதிவு செய்து தடயங்களை சேகரிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோரின் தகவல்களை பாதுகாத்து வைக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதில் பாதிப்பு ஏற்படக்கூடாது. தவறுகள் நடப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குகளை சரியான நேரத்தில் முடித்து குற்றவாளிக்கு உரிய நேரத்தில் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.