இந்தியாவில் கரோனா மற்றும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதே சமயம், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு மீண்டும் 1.5 லட்சத்தைக் கடந்துள்ளது. இதையடுத்து, டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (09/01/2022) மாலை 04.30 மணியளவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் காணொளி மூலம் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய உள்துறை செயலாளர் அஜய்பல்லா மற்றும் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் காணொளி மூலமாகக் கலந்து கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை (10/01/2022) பிற்பகல் 03.30 மணியளவில் காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். அதில் கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் கூறுகின்றனர்.
மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அறிவிப்பாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.