உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது, கட்டுப்பாட்டை இழந்து 270 டிகிரி கோணத்தில் சுழன்றது அங்கிருந்த பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்தது. எனினும் கடைசி நேரத்தில் விமானி சாமர்த்தியமாக தரையிறக்கியதால், மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தரையிறங்கிய போது, வேகத்தைக் குறைக்காமல், சட்டென்று ஹெலிகாப்டர் இறக்கப்பட்டதால், தரையில்பட்டதும் அந்த ஹெலிகாப்டர் மீண்டும் எம்பி குதித்து 270 டிகிரி கோணத்தில் சுழன்றது. ஒரு வழியாக தள்ளாட்டத்தைக் கட்டுப்படுத்தி விமானி ஹெலிகாப்டரைத் தரையிறக்கினார்.
இந்த சம்பவத்தை அடுத்து, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இது தற்போது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் பிரசித்திபெற்ற ஆன்மீக தளங்களில் ஒன்று கேதார்நாத். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கேதார்நாத் கோயில் கடல் மட்டத்தில் இருந்து பல்லாயிரம் அடி உயரத்திற்கு இருப்பதால், பக்தர்களின் வசதிக்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.