ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 பேர் இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கைகள் என்பது சில சடலங்களை மீண்டும் எண்ணியதால் ஏற்பட்ட குழப்பத்தால் தவறாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்குத் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல் நீடிப்பதாக ஓடிசா அரசு தெரிவித்துள்ளது. ரயில் விபத்தில் சிக்கிய உயிரிழந்தவர்களின் உடல்கள் பாலசோரில் உள்ள அரசு மருத்துவமனையிலும் ஒரு அரங்கு ஒன்றிலும் வைக்கப்பட்டுள்ளது.ஒரே இடத்தில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளதால் அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிதைந்து போன உடல்களை படம் எடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அடையாளம் காண வசதியாக புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களை அடையாளம் காண மேற்குவங்கம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் ஒடிசா மாநிலம் பாலசோருக்கு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். 275 உடல்களில் 88 உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.