நாடாளுமன்ற கூட்டத்தொடரில் என்ஐஏ (NIA), முத்தலாக்(TRIPLE TALAQ), ஆர்டிஐ (RTI) திருத்தம், மோட்டார் வாகன திருத்தம், சட்டவிரோத தடுப்புச் செயல்கள், மசோதாக்கள் உள்பட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் எளிதில் மசோதாக்கள் நிறைவேறி வருகின்றன. சர்ச்சைக்குரிய பல மசோதாக்கள் நிலைக்குழு அல்லது தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு விவாதிக்கப்பட்ட பின்னர் நிறைவேற்றுவது தான் நாடாளுமன்றத்தில் பாரம்பரியமாக உள்ளது. ஆனால் தற்போது இதுபோன்ற நடைமுறைகளை புறக்கணித்து விட்டு மசோதாக்கள் அவசர கதியில் மத்திய அரசு நிறைவேற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 17 கட்சிகள் மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத்தலைவருமான வெங்கய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளன. அந்த கடிதத்தில் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எந்த ஒரு மசோதாவுமே நிலைக்குழு அல்லது தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்படாமல் அவசர கதியில் நிறைவேற்றப்படுவதாகவும், மசோதாக்களை நிலைக்குழுவுக்கு அனுப்பி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முறையிட்டன. ஆனால் இந்த கோரிக்கையை ஆளும் கட்சி ஏற்கவில்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.