இந்தியா மற்றும் சுவீடன் நாடுகளுக்கிடையே பாதுகாப்புத் தொழில்துறை ஒத்துழைப்பு தொடர்பான இணையக் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், சுவீடனின் பாதுகாப்பு தொழிற் நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
இந்த இணையக் கருத்தரங்கில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளில், முற்போக்கான கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் மூலம் இந்திய பாதுகாப்புத் தொழில்துறை வளர்ச்சியடைந்துள்ளது. இது இந்தியத் தேவைகளுக்கு மட்டுமல்லாமல் உலகளாவிய தேவையையும் பூர்த்தி செய்ய இந்திய பாதுகாப்பு தொழில்துறையைத் தூண்டியுள்ளது.
இந்தியா மற்றும் சுவீடன் பாதுகாப்பு தொழிற்சாலைகள் இணைந்து உற்பத்தி செய்வதற்கும், இணைந்து வளர்ச்சியடைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்தியத் தொழிற்சாலையால், சுவீடன் தொழிற்சாலைகளுக்குப் பொருட்களை வழங்க முடியும். உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் பாதுகாப்பு காரிடர்களில் (இராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில்) முதலீடு செய்ய சுவீடன் நிறுவனங்களை அழைக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறேன். அங்கு மாநில அரசுகள் வழங்கும் தனித்துவமான சலுகைகளாலும், இந்தியாவின் திறமைமிகு தொழிலாளர்களாலும் நீங்கள் பெரிதும் பயனடையலாம். இந்தியாவின் பாதுகாப்பு தொழிற்சாலைகளைப் பார்வையிடச் சுவீடனிலிருந்து ஒரு உயர்மட்ட தூதுக்குழு வரவேண்டும் என என இந்திய அரசாங்கத்தின் சார்பாக அழைப்பு விடுகிறேன்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.