ஆண் நண்பருடன் அடிக்கடி பார்த்ததால் ஆத்திரமடைந்த தந்தை சொந்த மகளையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ட்ரோனிகா நகரில் கடந்த 9ஆம் தேதி அடையாளம் தெரியாத சிறுமி ரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதாக காவல்துறைக்கு தரப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, உடலைக் கைப்பற்றி பிரதேப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லி கர்வால் நகர் காவல்நிலையத்தில் கடந்த 7ஆம் தேதி 13 வயது சிறுமியைக் காணவில்லை என சுதேஷ்குமார் என்பவர் புகாரளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காட்டப்பட்ட அடையாளத்தின் பேரில், சிறுமி சுதேஷ்குமாரின் மகள் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், கொலைக்கான காரணம், கொலையாளி யார் என்ற தகவல்கள் தெரியாததால் தொடர்ந்து இதுகுறித்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி மாலை ட்ரோனிகா நகர் சிசிடிவி காட்சியில் சுதேஷ்குமாருடன் சிறுமி இருசக்கர வாகனத்தில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சுதேஷ்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தனது மகள் அவளது ஆண் நண்பருடன் அடிக்கடி பழகுவதை சுதேஷ்குமார் கண்டித்துள்ளார். சம்பவ தினத்தன்றும் அதேபோல் தனது மகள் வெளியே ஆண் நண்பரைச் சந்திக்க செல்வதைக் கவனித்த சுதேஷ்குமார், அவரைப் பின்தொடர்ந்து சென்று கூட்டி வந்துள்ளார். பின் தனது மகளுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, காவல்நிலையத்தில் புகாரளித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது சுதேஷ்குமார் சிறையலடைக்கப்பட்டுள்ளார்.