புதுச்சேரி மாநிலத்திலுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களுக்கென நல வாரியம் அமைக்க வேண்டும், தீபாவளி பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதையடுத்து அமைச்சர் கந்தசாமி முன்னிலையில், தொழிற்சங்க நிர்வாகிகள், அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் ஜனவரி 10-ஆம் தேதிக்குள் நலவாரியம் அமைக்கப்படும் என்றும், தீபாவளி பண்டிகைக்கு ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கந்தசாமி உறுதியளித்தார்.
ஆனால் பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொண்டபடி அல்லாமல் ரூ.500 மட்டுமே பரிசுத்தொகை வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு அதிகாரிகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர்.
அதன்படி முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று (03.12.2019) ஆட்டோ டிரைவர்கள், தையல் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்வோர் என பல்வேறு வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரான்சுவா மார்த்தேன் வீதி அருகே கூடிய அவர்கள் ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமையில் தலைமை செயலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
அப்போது காவல்துறையினர் அவர்களை கைது செய்யும் விதமாக சேதுசெல்வத்தை பிடித்து ஜீப்பில் ஏற்றினர். அதற்கு அமைப்புசாரா தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜீப் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அதற்கு அமைப்புசாரா தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே காவல்துறையினருக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சிலர் அந்த பகுதியில் நின்றிருந்த வாகனங்களை இழுத்து வந்து நடுரோட்டில் நிறுத்தினர். அதில் போலீஸ் ஏட்டு கண்ணன் என்பவரின் கையில் காயம் ஏற்பட்டது.
சேதுசெல்வத்தை விடுவிக்கும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அமைப்புசாரா தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசார் வேறு வழியின்றி அவரை விடுவித்தனர். அதன் பின் பிரான்சுவா மார்த்தேன் வீதியில் அமர்ந்து அமைப்புசாரா தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை வரை அந்த போராட்டம் நீடித்தது. அதனை தொடர்ந்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், சார்- ஆட்சியர் சுதாகர் அங்கு வந்து தொழிலாளர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தீபாவளி பரிசுத்தொகையாக ரூ.1000 வழங்க கோப்பு தயாராகி வருகிறது. விரைவில் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தின் காரணமாகவும், போராட்டத்திற்கு ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களில் வந்த தொழிலாளர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தியதாலும் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.