புது பயனாளர்களின் எண்ணிகையை அதிகரிக்க ஜியோ ஃபைபர் சேவையை 30 நாட்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தும் வண்ணம் புதிய அறிவிப்பு ஒன்றை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது ஏற்கனவே உள்ள பயனாளர்களுக்குப் பொருந்தாது.
இந்திய அளவில் அதிகப்படியான மக்கள் ஜியோ இணைய சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஜியோ நிறுவன வருகைக்குப் பின்னரே இந்தியாவில் இணையதளப் பயன்பாடும் அதிகமானது. அதனைத் தொடர்ந்து ஜியோ நிறுவனமும் தங்கள் பயனாளர்களின் எண்ணிகையை அதிகரிக்கவும், ஏற்கனவே உள்ள பயனாளர்களைத் தக்க வைக்கவும் பல்வேறு புதிய அறிவிப்புகளை அடிக்கடி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜியோவின் மற்றொரு சேவையான ஜியோ ஃபைபரில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ரூ.399, ரூ.699, ரூ.999, ரூ.1,499 என்ற வகையில் நான்கு ப்ளான்களை அறிவித்துள்ளது. ஒவ்வொரு ப்ளான்களிலும் அந்தப் பணத்தொகைக்கு ஏற்ப இணையத்தள வேகம் மாறுபடும். மேலும் கூடுதல் சலுகையாக இந்தியாவின் முன்னணி ஒ.டி.டி தளங்களுக்கான சப்ஸ்கிரிப்ஷன் இலவசமாக வழங்கப்படும். ரூ.399, ரூ.699, வகை ப்ளான்களை பயன்படுத்த நினைப்பவர்களுக்கு ஒ.டி.டி சேவையானது வழங்கப்படவில்லை. 30 நாட்களுக்குப் பிறகு பிடிக்கவில்லை எனும் பட்சத்தில் எந்தக் கேள்வியும் கேட்காமல் திரும்பி எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது
இது குறித்து ஆகாஷ் அம்பானி கூறும் போது, "ஜியோ ஃபைபர் சேவை இந்தியாவில் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் பல லட்சக்கணக்கான வீடுகளை இணைத்துள்ளோம். இந்தியா மற்றும் இந்தியர்கள் குறித்தான எங்கள் திட்டம் பெரியது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் இதை எடுத்துச் சென்று, அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும்படி செய்வதே எங்கள் நோக்கம்" என்றார்.
இந்தத் திட்டமானது செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 31 -க்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்கனவே ஜியோ ஃபைபர் இணைப்பை பெற்றவர்களுக்கும் இந்தச் சேவையானது கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் ஃபைபர் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.