உத்தரப்பிரதேச மாநிலம், பிரோஸ்பூர் பகுதியில் அரசு சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் அங்குள்ள பணியாளர்கள், வரும் நோயாளிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.
இந்த தொடர் புகாரின் காரணமாக, மாவட்ட ஆட்சியர் கிருதி ராஜ், அந்த மருத்துவமனையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஆட்சியர் கிருதி ராஜ் தலையில் முக்காடு அணிந்து ஒரு நோயாளி போல் அந்த மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை சந்தித்துள்ளார். அப்போது, அந்த மருத்துவர், ஆட்சியர் கிருதி ராஜிடம் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆட்சியர் கிருதி ராஜ், தான் யார் என்பதை தெரிவித்த பிறகு, அந்த மருத்துவமனையே ஆட்டம் கண்டுள்ளது.
அதன் பின்னர், ஆட்சியர் கிருதி ராஜ் அந்த மருத்துவமனை முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டார். அந்த ஆய்வில், மருத்துவர்கள் முறையாக வருகை தராதது, நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாதது, காலாவதியான மருந்துகள் அளிக்கப்படுவது என பல குற்றங்கள் கண்டறியப்பட்டது.
இது குறித்து ஆட்சியர் கிருதி ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நாய்க்கடிக்கு ஊசி போடுவதற்கு மருத்துவமனைக்கு நோயாளி ஒருவர் சென்ற போது காலை 10 மணிக்குப் பிறகும் மருத்துவர் வரவில்லை என சுகாதார நிலையம் தொடர்பாக எனக்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில், நான் மறைந்திருந்து, முக்காடு போட்டுக் கொண்டு அங்கு சென்றேன். அப்போது மருத்துவரின் நடத்தை ஏற்புடையதாக இல்லை. மேலும், சிலர் மருத்துவமனைக்கு சரியாக வருகை தராதது தெரியவந்தது.
வருகை பதிவேட்டில் சிலரின் கையெழுத்து இருந்தாலும், சுகாதார நிலையத்தின் உள்ளே அவர்கள் இல்லை எனவும் தெரிந்தது. கையிருப்பில் உள்ள பெரும்பாலான மருந்துகள் காலாவதியாகிவிட்டன. சுகாதார மையத்தில் தூய்மையும் பராமரிக்கப்படவில்லை. இது குறித்து நாங்கள் மேலும் விசாரணை நடத்தவுள்ளோம்” என்று கூறினார்.