மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வருகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தனர். கூட்டணி அரசு இரண்டரை ஆண்டுகளை கடந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி உயர்த்தினார். 39 சட்டமன்ற உறுப்பினர்களுடன் அசாமில் உள்ள சொகுசு விடுதியில் முகாமிட்டு கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்.
அரசு பங்களாவை விட்டு வெளியேறிய உத்தவ் தாக்கரே ஆட்சியைத் தக்க வைக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. பா.ஜ.க.வின் மாநில தலைவரும், மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், டெல்லி சென்று ஆலோசனை நடத்திவிட்டு திரும்பிய நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டார்.
ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக சிவசேனா உச்சநீதிமன்றத்தை நாடியது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என தீர்ப்பு வழங்கப்பட்ட சில நிமிடங்களில் சமூக வலைத்தளங்கள் மூலம் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, முதலமைச்சர் மற்றும் எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இரண்டரை ஆண்டுகால ஆட்சி நிறைவாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற உத்தவ் தாக்கரே, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை நேரில் சந்தித்து தனது பதவி மற்றும் அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
அதேநேரம், மும்பை தாஜ் ஹோட்டலில் கூடியிருந்த பா.ஜ.க. தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் பதவியில் அமரப்போகும் தேவேந்திர பட்னாவிஸிற்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உத்தவ் தாக்கரேவின் ராஜினாமா அறிவிப்பால், இரண்டு வாரமாக அசாமில் முகாமிட்டுள்ள ஷிண்டே தலைமையிலான அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மகாராஷ்டிரா திரும்புகின்றனர். அவர்களுடன் இணைந்து மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.