நேற்று மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று காலை திடீரென பாஜக ஆட்சியமைத்தது.
மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், “பாஜகவுடன் கூட்டணி என்பது, அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு. பாஜக ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை. அதேபோல அஜித்பவாரின் முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை" என தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மகாராஷ்டிரா அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்ரே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய உத்தவ் தாக்ரே, "மகாராஷ்டிராவில் தற்போது நடந்துள்ளது அரசியல் துல்லியத் தாக்குதல். இதற்கு மகாராஷ்டிர மக்கள் பழிக்கு பழி தீர்ப்பார்கள். பாஜக இதுவரை வாக்கு இயந்திரத்தை வைத்து விளையாடியது. அதேபோல இது பாஜகவின் புதுமாதிரியான விளையாட்டு. தற்போது தேர்தல்கள் கூட தேவை இல்லை என நான் நினைக்கிறேன். நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக ஆட்சி கவிழ்ந்துவிடும்.
என்னை பொருத்தவரை உண்மையான அரசியல் யுத்தம் தொடங்கி விட்டது. ஒருவேளை சிவசேனா எம்எல்ஏக்களை யாராவது பிளவுபடுத்தினால் மகாராஷ்டிரா தனது தூக்கத்தை இழக்கும். சரத் பவாரும், நானும் இணைந்தே செயல்படுவோம். இந்த அரசியல் குழப்பத்தால் மீண்டும் தேர்தல் வராது. சிலர் பெவிக்கால் (பட்னாவிஸ்) போல் இருக்கையில் ஒட்டிக்கொள்ளவே விரும்புகின்றனர்" என தெரிவித்தார்.