சிவசேனா கட்சி நிறுவனரான பால் தாக்கரே நினைவிடம் மத்திய மகாராஷ்டிரா, அவுரங்காபாத்தில் உள்ள பிரியதர்ஷினி பூங்காவில் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த நினைவிட பணிகளுக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட உள்ளன என தகவல்கள் பரவியது. இதன் காரணமாக ஏற்பட்ட சர்ச்சைக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பிரியதர்ஷினி பூங்காவில் அமைய உள்ள பால் தாக்கரே நினைவிடத்திற்காக 1000 மரங்கள் வெட்டப்பட உள்ளன என்ற ஊடக செய்தி ஒன்றை மேற்கோள்காட்டி முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் குற்றம்சாட்டியிருந்தார். இதன் காரணமாக நினைவிடம் அமைக்கும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்பணிகளுக்காக பிரியதர்ஷினி பூங்காவை பார்வையிட்ட மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நினைவிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ள பகுதியில் ஒரு மரம் கூட வெட்டப்படாது என்பது உறுதி. மேலும் உள்நாட்டு மரக்கன்றுகள் அதிக எண்ணிக்கையில் நடப்படும்" என தெரிவித்தார்.