
டெல்லி, ஆர்.கே.புரம் பகுதியை அடுத்த அம்பேத்கர் பாஸ்தி எனும் பகுதியில் இன்று காலை இரண்டு இளம் பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
டெல்லி ஆர்.கே.புரம் பகுதியை அடுத்த அம்பேத்கர் பாஸ்தி எனும் பகுதியில் வசித்துவருபவர்கள் பிங்கி(30) மற்றும் ஜோதி (29). இவர்கள் இன்று காலை தங்கள் வீட்டில் இருந்த போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த ஒரு நபர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். அவர்களை சுட்டுவிட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
பிங்கி வீட்டில் இருந்து வந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்தபோது இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்துவிழுந்திருந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் டெல்லி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த மர்ம நபரை தேடிவந்தநிலையில், அவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிடிபட்ட அந்த நபரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பிங்கி மற்றும் ஜோதி ஆகியோரின் சகோதரரிடம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனை இருந்தது தெரியவந்தது. மேலும், பிடிபட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்து டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.