முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த 08/12/2021 அன்று பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தும், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். பிபின் ராவத்தின் மனைவியும் இந்த விபத்தில் உயிரிழந்தார். நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்த துயர நிகழ்வு. இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச்சூழலில் உத்தரகாண்ட் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்று (10.12.2021) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியதும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்பின்னர் அம்மாநில எம்.எல்.ஏ ஒருவர், உத்தரகாண்டில் கட்டப்பட்டுவரும் சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்திற்குப் பிபின் ராவத் பெயரை சூட்ட தீர்மானம் கொண்டுவந்தார். அது சட்டமன்றத்தில் அனைத்து கட்சியினரின் ஆதரவோடு நிறைவேறியது .
இதற்கிடையே ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான சாய் தேஜாவின் குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஆக்ராவைச் சேர்ந்த விங் கமாண்டர் பிருத்வி சிங் சவுகானின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு பிருத்வி சிங் சவுகானின் பெயர் சூட்டப்படும் எனவும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.