ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தில் எருமை மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதிய விவகாரத்தில் நான்கு பேர் சேர்ந்து ஒரு சிறுவனை அடித்துக் கொன்றுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், சந்தாலி தோலாவி அருகே உள்ள குர்மஹாத் எனும் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தனது இரு நண்பர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கால்பந்து விளையாட்டைப் பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்கள், ஹன்ஸ்திஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ததி எனும் கிராமத்தில் வந்துகொண்டிருந்தபோது சாலையில் எருமை மாடுகள் கூட்டமாகச் சென்றுள்ளது. அதன் மீது இந்த சிறுவர்கள் வந்த இருசக்கர வாகனம் மோதியுள்ளது.
இந்த விபத்து ஏற்பட்டதும் அங்கிருந்தவர்களுக்கும் இந்த சிறுவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த 16 வயது சிறுவன் மாட்டின் மீது மோதியதற்கு இழப்பீடு தந்துவிடுவதாகச் சொல்லியுள்ளார். ஆனால், அதனைப் பொருட்படுத்தாத அந்த மக்கள் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து அந்த 16 வயது சிறுவனுடன் வந்த மற்ற இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல இந்தச் சிறுவன் மட்டும் நான்கு பேர் கொண்ட கும்பலிடம் மாட்டிக்கொண்டார்.
அந்த நான்கு பேரும் சேர்ந்து அந்தச் சிறுவனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுவன் மயங்கி விழ, அவரை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அந்தக் கிராமத்தினர் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்தச் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விவகாரம் அறிந்த அப்பகுதி போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதேசமயம், உயிரிழந்த சிறுவனின் உறவினர்களும், அவர் பகுதியைச் சேர்ந்த பொது மக்களும் சிறுவனைத் தாக்கிக் கொன்ற அந்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இரு தினங்களில் கைது செய்யப்படுவர் எனத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.