கேரளாவில் அடுத்தடுத்து இரண்டு தற்கொலைகள்: ப்ளூவேல் காரணமா?
கடந்த மாத இறுதியில் தனது அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுவன், ப்ளுவேல் இணையதள விளையாட்டினைத் தொடர்ந்து விளையாடி வந்ததாகவும், அதனால் தான் அவன் தற்கொலை செய்துகொண்டான் எனவும் அவனது தாயார் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் மாவட்டம் விலாபள்ளிசாலா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மனோஜ். இவன் கடந்த ஜூலை 26-ஆம் தேதி தனது அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். அந்த சிறுவன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த ப்ளூவேல் விளையாட்டை விளையாடி வருவதாக தன் தாயாரிடம் தெரிவித்துள்ளான்.
மேலும், ‘கூர்மையான கண்ணாடி போன்றவற்றால் கைகளில் காயம் ஏற்படுத்தினான். அவனது கையில் ABI என அவன் என்ன காரணத்திற்காக எழுதினான் என தெரியவில்லை. நீச்சல் தெரியாத அவன் ஒருநாள் தண்ணீரில் குதித்துவிட்டான். அக்கம் பக்கத்தினர்தான் காப்பாற்றினர். இந்த விளையாட்டின் இறுதியில் யாரையாவது கொல்லவேண்டும். அல்லது தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என என்னிடம் சொல்லும்போது நான் அதிர்ந்துபோனேன். அவனை அந்த விளையாட்டை விளையாடக்கூடாது என்று கூறினேன். அவனது மரணத்திற்குக் காரணம் அந்த விளையாட்டை விடாமல் விளையாடியது தான்’ என மனோஜின் தாயார் தெரிவித்துள்ளார்.
இதனை மறுத்துள்ள காவல்துறை அதிகாரி, தற்கொலைக்கான உண்மைக்காரணத்தை தெரிந்துகொள்ள விசாரித்து வருகிறோம். அதுவரை எதையும் உறுதியாக சொல்லமுடியாது என தெரிவித்துள்ளார்.
இதேபோல் கடந்த ஜூலைமாத இறுதியில் சாவந்த் என்னும் 22 வயதுமிக்க இளைஞர் கண்ணூர் பகுதியில் தற்கொலை செய்துகொண்டார். இதற்கும் ப்ளூவேல் விளையாட்டுதான் காரணம் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும், மனோஜ் போலவே இவரும் தன்னைத்தானே கிழித்துக்கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விளையாட்டை முழுமையாக தடைசெய்யக்கோரி கேரள அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
- ச.ப.மதிவாணன்