குஜராத்தில் மக்களுக்கு இலவசமாக இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் விரைவில் சட்டபேரவைத் தேர்தல் வர உள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பை குஜராத் அமைச்சர் ஜீட்டு வகானி தெரிவித்தார்.
தீபாவளி பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் படி பிரதமரின் உத்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு இந்த இலவச சிலிண்டர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத்தில் 38 லட்சம் மக்கள் ஓராண்டுக்கு இரண்டு சிலிண்டர்களை பெற்று பயனடைவார்கள் என கூறப்படுகிறது. சி.என்.ஜி மற்றும் பி.என்.ஜி மீதான வாட் வரியில் 10% குறைக்கப்படும் எனவும் குஜராத் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் ஜீட்டு வகானி கூறுகையில் மாநிலத்தில் உள்ள குடும்பத் தலைவிகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்காக 650 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.