இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. இதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று நடைபெற உள்ளது.
மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மணிப்பூர் வன்முறை விவகாரம் குறித்து இன்று கூட உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு மற்றும் திருச்சி சிவா, அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத், தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதில் கலந்து கொண்டு விரிவான ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று கூடும் மழைக்காலக் கூட்டத்தொடரில் மணிப்பூரில் வன்முறை, பொது சிவில் சட்டம், ஆளுநர்கள் செயல்பாடுகள், அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள், விலைவாசி உயர்வு, டெல்லி அதிகாரம் தொடர்பான அவசர சட்டம் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மழைக்கால கூட்டத்தொடர் கூடுகிறது. எனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் மழைக்காலக் கூட்டத்தொடரில் டெல்லி அதிகாரம் தொடர்பான அவசரச் சட்டம், டிஜிட்டல் தனிநபர் தகவல் மசோதா, வனப் பாதுகாப்புத் திருத்த மசோதா உள்ளிட்ட 21 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஏற்கனவே நிலுவையில் உள்ள 7 மசோதாக்கள் விவாதத்திற்கு கொண்டு வர உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம், ஹின்டன்பர்க் வெளியிட்ட அதானி பங்குகள் முறைகேடுகள் தொடர்பான அறிக்கை போன்றவற்றால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.