எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட 36 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மீது மொத்தம் 71 கோடி ரூபாயை ஆர்.பி.ஐ. அபராதமாக விதித்துள்ளது.
இது குறித்து ஆர்.பி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இடையே பணப்பரிவர்த்தனை செய்யும்போது SWIFT எனும் மென்பொருள் உபயோகிக்கப்படும். இதனை முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மோசடி செய்யப்பட்ட ரூ. 14,000 கோடிக்கும் இந்த மென்பொருளை முறையாக பயன்படுத்தாதே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிகளுக்கான அபராதம் ரூ. 1 கோடி முதல் ரூ. 4 கோடிவரை விதித்துள்ளது ஆர்.பி.ஐ.
இதில் பாங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி மற்றும் கர்நாடகா வங்கி ஆகியவற்றுக்கு தலா ரூ. 4 கோடியை அபராதம் விதித்துள்ளது ஆர்.பி.ஐ.
மேலும், சிட்டி யூனியன் பாங்க், மற்றும் ஐ.ஓ.பி. ஆகியவற்றுக்கு தலா ரூ. 3 கோடியை அபராதமாக ஆர்.பி.ஐ. விதித்துள்ளது. இது தவிர்த்து மற்ற பொதுத்துறை வங்கிகளுக்கும், தனியார் வங்கிகளுக்கும் ரூ. 1 கோடி முதல் ரூ. 4 கோடிவரை ஆர்.பி.ஐ அபராதம் விதித்துள்ளது.