Skip to main content

செஸ் ஒலிம்பியாட்- பிரதமரின் பயண விவரம்! 

Published on 24/07/2022 | Edited on 24/07/2022

 

Chess Olympiad- Prime Minister's travelogue!

 

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவில் கலந்துக் கொள்ள சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண விவரங்கள் வெளியாகி உள்ளன. 

 

அதன்படி, வரும் ஜூலை 28- ஆம் தேதி அன்று பிற்பகல் அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 04.45 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். விமான நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு விமான தளத்திற்கு செல்லும் பிரதமர், அங்கிருந்து கார் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். அங்கு செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, நிகழ்ச்சியில் உரையாற்றிய பின்பு பிரதமர் நரேந்திர மோடி, அன்றைய தினம் இரவு ஆளுநர் மாளிகைக்கு சென்று தங்குகிறார். 

 

அதைத் தொடர்ந்து, ஜூலை 29- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு செல்கிறார். பின்னர், காலை 11.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பிரதமர், அங்கிருந்து தனிவிமானம் மூலம் அகமதாபாத்திற்கு செல்கிறார்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் கடும் புகைமூட்டம்; 50 விமான சேவை பாதிப்பு

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
50 flight services affected in Chennai due to heavy smog
கோப்புப்படம்

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப தமிழ்நாடு முழுவதும் இன்று போகி கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது. 

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருவிழாவின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது போகி. கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை ஜனவரி 13 அல்லது 14 ஆம் நாளில் கொண்டாடப்படும்.  அந்த வகையில் தைப் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் போகி கொண்டாடப்படுகிறது. 

சென்னையில் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து உற்சாகமாக மேள தாளங்களை முழங்கிக் கொண்டு பழைய பொருட்களைத் தீயிட்டு வருகின்றனர். இதனிடையே டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் சில இடங்களில் அது மீறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு காற்று மாசு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் கடும் புகை மூட்டம் காரணமாகச் சென்னையில் 50 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து அந்தமான், புனே, மும்பை, டெல்லி, தூத்துக்குடி, ஐதராபாத், மதுரை செல்ல வேண்டிய விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 21 விமானங்கள் புறப்படுவதிலும், 21 விமானங்கள் சென்னைக்கு வருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் செல்ல வேண்டிய விமானம் புகை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் தரையிறங்கவிருந்த சிங்கப்பூர், லண்டன், இலங்கை, டெல்லி ஆகிய இடங்களிலிருந்து வந்த விமானங்கள் புகை மூட்டம் காரணமாக ஐதராபாத்திற்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது. 

Next Story

விமான கட்டணம் பல மடங்கு உயர்வு; பயணிகள் அதிர்ச்சி

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
 Airfare hiked manifold; Passengers are shocked
மாதிரிப்படம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாகப் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என்று அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.

வழக்கமான கட்டணத்தை விட 3  முதல் 5 மடங்கு வரை விமான டிக்கெட் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த வகையில் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 367 ரூபாயாக இருந்த விமான கட்டணம் பொங்கல் விடுமுறை காரணமாக 17 ஆயிரத்து 262 ரூபாயாக தற்போது உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 315 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 14 ஆயிரத்து 689 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேலும் சென்னையிலிருந்து சேலம் செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 290 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 11 ஆயிரத்து 329 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 264 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 11 ஆயிரத்து 369 ரூபாயாக உயர்ந்துள்ளது.