ஆந்திரா மாநிலம் திருப்பதி திருமலை ஏழுமையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக இலவசமாக மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார பேருந்தை மர்ம நபர் ஒருவர் கடந்த 24 ஆம் தேதி அதிகாலை திருடிச் சென்றுள்ளார். அப்போது பேருந்தின் சார்ஜ் தீர்ந்ததால் பேருந்தை காளஹஸ்தி அருகே சாலையில் விட்டுச் சென்றுள்ளார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
இதனையடுத்து ஜிபிஎஸ் சிஸ்டத்தை பயன்படுத்தி காளஹஸ்தி அடுத்துள்ள நாயுடுபேட்டை எனும் இடத்தில் திருடப்பட்ட பேருந்து இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதே சமயம் அலட்சியமாக இருந்த அதிகாரி மற்றும் 2 ஊழியர்கள் என 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து பேருந்தை திருடிச் சென்றவர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் திருப்பதி திருமலை ஏழுமையான் கோயிலில் 1.44 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சாரப் பேருந்தை திருடிச் சென்று பாதியில் விட்டுச்சென்ற கொள்ளையன் விஷ்ணுவை போலீசார் கைது செய்துள்ளனர். இவரை சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு பேருந்து கொள்ளையன் விஷ்னுவை போலீசார் தேடி வந்த நிலையில் திருப்பதியில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்தனர். போலீசார் விசாரணையில் மின்சாரப் பேருந்தை திருடி பேருந்தின் பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்க முயன்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.