அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் நிலையில், அவர் பயண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த இரண்டு நாட்கள் பயணத்தில் ட்ரம்ப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். அகமதாபாத் வரும் ட்ரம்ப்பை இந்திய பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார். அதன்பின் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடும் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் மதியம் 1.05 மணிக்கு அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு செல்கின்றனர். அந்த மைதானத்தில் சுமார் 1.25 லட்சம் மக்கள் பங்கேற்கும் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் ட்ரம்ப் கலந்துகொள்கிறார்.
பின்னர் மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்படும் ட்ரம்ப் மாலை 4.45 மணிக்கு ஆக்ரா செல்கிறார். மாலை 5.15 மணிக்கு தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்துவிட்டு 6. 45 மணிக்கு விமானத்தில் டெல்லி செல்லும் ட்ரம்ப் அங்கு அமெரிக்க பாதுகாப்புப் படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். பின்னர், நாளை காலை 10 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இந்த வரவேற்பு நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர் ட்ரம்ப் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்.
இதைத் தொடர்ந்து நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் ட்ரம்பும் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள உள்ளனர். இந்த பேச்சுவார்த்தை முடிந்தபிறகு மாலை 3 மணிக்கு டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு செல்லும் ட்ரம்ப், அங்குள்ள அதிகாரிகளை சந்திக்க உள்ளார். மேலும் இந்திய தொழிலதிபர்களுடனான சந்திப்பும் அங்கு நடைபெறுகிறது. பின்னர் இரவு 7.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ட்ரம்ப் இரவு 10 மணிக்கு அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார்.