தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு கவர்னர் இன்னமும் ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருக்கிறார். சமீபத்தில் கவர்னரைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த மசோதாவுக்கு ஒப்புதலளித்து ஜனாதிபதிக்கு விரைந்து அனுப்பிவைக்குமாறு வேண்டுகோள் வைத்திருந்தார். இருப்பினும் நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவைக் கிடப்பிலேயே வைத்திருக்கிறார் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும்படி ராஜ்யசபாவில் தனி நபர் மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார் திமுக எம்.பி.யான வழக்கறிஞர் வில்சன். இதுகுறித்து கருத்து தெரிவித்த எம்.பி. வில்சன், “தமிழகத்திலுள்ள மாணவ, மாணவிகளின் டாக்டர் கனவைச் சிதைக்கும் வகையில் 2016இல் கொண்டுவரப்பட்டதுதான் நீட் தேர்வு.
நீட் தேர்வினால் 17 மாணவர்கள் இதுவரை தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த நீட் தேர்வினை எதிர்த்து திமுக பலமுறை போராட்டம் நடத்தியுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு ராஜ்யசபாவில் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்திருக்கிறேன். தமிழகத்திலிருந்து நீட் தேர்வை விரட்டியடிக்க வேண்டுமென்பதுதான் திமுகவின் ஒரே நோக்கம்.
சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்படி இருக்கிறார். தமிழகத்திலிருந்து ஒரு டாக்டர் கூட உருவாகிவிடக் கூடாது என்கிற நிலைப்பாட்டில் ஒன்றிய அரசு இருக்கிறது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் தனிநபர் மசோதா மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தின் கிளையைத் தமிழகத்தில் அமைப்பது தொடர்பான தனிநபர் மசோதாவையும் தாக்கல் செய்திருக்கிறேன்” என்றார்.