இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்காவின் உயரிய இராணுவ விருதுகளில் ஒன்றான 'லெஜியன் ஆஃப் மெரிட்' விருதை வழங்கி கவுரவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
'லெஜியன் ஆஃப் மெரிட்' விருது தன்னிகரற்ற சேவைகளையும், சாதனைகளையும் பாராட்டி வழங்கப்படும் உயரிய விருதாகும். இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான கூட்டு பங்களிப்பை உயர்த்துவதிலும், உலகளாவிய சக்தியாக இந்தியா உருவாவதிலும் பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதிலும், கூட்டு பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனின் தலைமையைப் பாராட்டி அவருக்கும், சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியம் குறித்த பார்வை மற்றும் தலைமைத்துவத்திற்காகவும், ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கும் 'லெஜியன் ஆஃப் மெரிட்' விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதுகளை அந்தந்த தலைவர்களின் சார்பாக அந்தந்த நாட்டின் தூதர்கள் பெற்றுக்கொண்டனர்.