திரிபுராவில் கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடியும் அம்மாநில முதல்வர் பிப்லம் குமார் ஆகியோர் கலந்துகொண்ட விழாவில் பெண் அமைச்சரிடம் அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ஒருவர் தவறாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது. இதுகுறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி, திரிபுரா முதல்வர் பிப்லம் குமார் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் மனோஜ் சமூக நலத்துறை அமைச்சர் சந்தனாவின் இடுப்பில் கை வைக்கிறார். அதனை உணர்ந்த சந்தனா அமைச்சரது கையைத் தட்டி விடுகிறார். இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
இதனையடுத்து திரிபுரா எதிர்க்கட்சிகள் மனோஜ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மனோஜ் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. திரிபுரா பாஜக சார்பில், சம்பந்தப்பட்ட பெண் அமைச்சர் இதுவரையில் எந்தப் புகாரும் தெரிவிக்காதபோது எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலைப் பரப்பி வருவதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது அந்த பெண் அமைச்சர் சந்தனா, பிரதமர் பங்கேற்ற விழாவில் மனோஜ் எதார்த்தமாக நடந்துகொள்ளும்போது, அவருடைய கை என்மேல் பட்டுவிட்டது. எந்த தவறான நோக்கமும் அவரிடம் இல்லை. எதிர்கட்சிகள் இந்த விஷயத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் என்று கூறியுள்ளார்.