
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றும் தொடர்கிறது.
தற்போதைய நிலவரப்படி 280 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தற்போது அந்த இடத்திற்குச் சென்றுள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், விபத்து நடந்தது குறித்தும் அங்கு நடந்து வரும் மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்து வருகிறார். அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய அமைச்சர் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அனைத்து வித ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். சிறப்பு ரயில் ஒன்றை இயக்கவும் ஏற்பாடுகளை செய்துள்ளோம். அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளலாம். பயணிகள் புவனேஷ்வர்க்கு செல்கிறார்கள். அதன் பின் அவர்களுக்கு உணவுகள் வழங்கப்படும். அதன் பின்னர் அவர்கள் சென்னையை நோக்கி பயணம் மேற்கொள்வார்கள்.
சென்னைக்கு 867 பேர் முன் பதிவு செய்துள்ளனர். அவர்களின் முழு விபரங்களையும் அறியும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். அதில் எத்தனை பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அறியும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது வரை பல அழைப்புகள் வந்துள்ளன” எனக் கூறினார்.