மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஷேக் ஷாஜகான் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் ரேஷன் பொருட்கள் ஊழல் தொடர்பாக ஷாஜகான் ஷேக் வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகளை ஷேக் ஷாஜகான் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் தப்பிய ஷேக் ஷாஜகான் தலைமறைவாக இருந்தார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி கிராமத்து பெண்கள், ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீசில் புகார் அளித்தும், அதற்கு போலீசார் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஷேக் ஷாஜகானின் கூட்டாளிக்குச் சொந்தமான கோழிப் பண்ணைகளைப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடந்து வந்ததால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வந்ததது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. பெண்களின் இந்த போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரை பொதுமக்கள் செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. பெல்மஜுர் எனும் கிராமத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ அஜித் மெய்தியின் வீட்டை, அங்குள்ள பொதுமக்கள் தங்களுக்கு நீதி வழங்கக் கோரி கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் சூரையாடினர். இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி, சந்தேஷ்காலி சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு அஜித் மெய்தி பேட்டி அளித்த போது, அங்குள்ள பொதுமக்கள் ஆத்திரமடைந்து தங்களது செருப்பால் அடித்தும், தாக்கவும் செய்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையக் குழு சந்தேஷ்காலி கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், சந்தேஷ்காலியில் உள்ள பெண்கள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்று கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சந்தேஷ்காலி விவகாரத்தை கொல்கத்தா உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணையில், ‘சந்தேஷ்காலி பகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பே காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஷேக் ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கைதுக்கு இடைக்காலத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை. எனவே, ஷேக் ஷாஜகான் கட்டாயம் கைது செய்யப்பட வேண்டும்’ என்று கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், இந்த சம்பவம் தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேரை ஏற்கெனவே போலீசார் கைது செய்திருந்தனர்.
இதையடுத்து, தலைமறைவாக இருக்கின்ற ஷேக் ஷாஜகான் எங்கே இருக்கிறார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியும் என்று பா.ஜ.க.வினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில், 55 நாட்களாகத் தலைமறைவாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷேக் ஷாஜகானை மேற்கு வங்க போலீசார் இன்று (29-02-24) காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஷேக் ஷாஜகான் இன்று மதியம் பாசிர்ஹத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.