கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு மாற்றுப்பாலின பாதுகாப்பு மசோதாவில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இந்த மசோதாவில் திருநர் சமூகத்தால் பரிந்துரைக்கப்பட்ட எந்த ஒரு பாலினத்தவருக்கும் அவருடைய சுய அடையாளம், படிப்புச் சான்றிதழ் தொடங்கி அனைத்து வகையான சான்றிதழ்களிலும் மாற்றம் செய்ய வேண்டும். திருநங்கைகளின் பல்வேறு உரிமைகள் குறித்து மாவட்ட மேற்பார்வை குழு பரிந்துரைக்க வேண்டும் என்ற சரத்தை அந்த மசோதாவில் இருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தியும், மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருநர் மசோதாவை திரும்ப பெறக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே திருநங்கை ஷீத்தல்நாயக் தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கருப்பு உடை அணிந்து, கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மத்திய அரசு திருநங்கைகளை அழிக்கும் வகையில் மசோதாவை கொண்டு வந்துள்ளதாகவும், மசோதாவில் 17 திருத்தந்தங்களை கொண்டு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அப்போராட்டத்தில் திருநங்கைகள் கோரிக்கைகள் வைத்தனர். மேலும் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வோம் எனவும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.
திருநங்கைகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் நமச்சிவாயம் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.