கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாகத் மக்களவைத் தேர்தல் நடைபெற்று இன்று (01-06-24) 6 மணியுடன் முடிவடைந்தது.
இதற்கிடையே, ஜூன் 1ஆம் தேதி அன்று முக்கிய ஆலோசனை நடத்த இந்தியா கூட்டணி கட்சியினருக்குக் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, இன்று (01-06-24) டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ராகுல் காந்தி, சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அகிலேஷ் யாதவ், சரத்பவார், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்திய கூட்டணி 295 இடங்களிலும், பாஜக 220 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 235 இடங்களிலும் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி தனித்து வலுவான மற்றும் நிலையான ஆட்சியை அமைக்கும். பிரதமர் பதவி குறித்து ஜூன் 4 அன்று முடிவு செய்யப்படும்” என்று கூறினார்.