கண்ணூர் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் அதிகாலை 01.30 மணியளவில் திடீரென மர்ம நபர் ஒருவரால் தீ வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கனவே அதே ரயில் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி வேறு சில நபர்களால் தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி அது தொடர்பாக காவல்துறை மற்றும் ரயில்வே துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தீவிரவாத தாக்குதல் தொடர்பாக ரயிலுக்கு தீ வைக்கப்பட்டு இருக்கலாம் என யூகங்கள் வெளியாகி ரயிலுக்கு தீ வைக்கப்பட்டவர் தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் கண்ணூர் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஒரு பெட்டி முழுவதும் எரிந்து நாசமானது.
சுற்றி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டதில் பிரஸுஜின் ஜீத் லிஸ்தகர் என்பவர் கைது செய்யப்பட்டார். கல்கத்தாவில் வெயிட்டராக வேலை பார்த்து வந்த இவர் சில நாட்களுக்கு முன்பு கண்ணூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். வேலை ஏதும் கிடைக்காததால் ரயில்வே பிளாட்பார்மில் பிச்சை எடுக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது ரயில் நிலைய பிளாட்பார்மில் அவர் பிச்சை எடுக்க அதிகாரிகள் அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த அவர் ரயில் பெட்டிக்கு தீ வைத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.