புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்வது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசு செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்வது குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த முதலமைச்சர் நாராயணசாமி, “கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக புதுச்சேரி அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. வைரஸின் தாக்கம், பரவாமல் தடுப்பது, அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதுச்சேரியில் சந்தேகப்படும் படியான 23 பேர்களின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.
பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பொதுத் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும். திரையரங்குகள், வணிக வளாகங்களும் மூடப்படுகின்றன. சன் டே மார்க்கெட்டும் செயல்படாது. எவ்விதமான போட்டிகள், பொதுக்கூட்டங்களும் நடத்தக் கூடாது. திருமணம் உள்ளிட்ட குடும்ப விழாக்களில் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்களை அழைத்து நடத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொது இடங்களில் பொதுமக்கள் கைகளைக் கழுவுவதற்கு சோப்பு, தண்ணீர் வைக்க உள்ளாட்சித்துறை ஏற்பாடு செய்துள்ளது. ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். அதேபோல் மார்க்கெட் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் நிதியிலிருந்து ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டு சிகிச்சைக்கான உபகரணங்கள் வாங்கப்படும். தேவைப்படும் டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால், மாஹே, யானாம் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள். அவர்களையும் பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் மாநிலம் என்பதால் எல்லை பகுதியில் சோதனை நடத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிக்க சென்னை, திருச்சி விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கிறோம். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.
கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளில் அதிக மக்கள் கூடுகின்றனர். மக்களின் மத நம்பிக்கையை தடுத்து நிறுத்த முடியாது. ஆனாலும் அதிக கூட்டத்தைத் தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்படுகிறது, மதுபார்களை மூடுவது குறித்து சில நாட்களில் முடிவு செய்யப்படும் “ என்றார்.
அதேசமயம் தரமற்ற இறைச்சிகளால் தயாரான உணவுகளை பரிமாறுவது தெரியவந்தால் ஓட்டல்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.