Skip to main content

மொத்தமாக அடக்கம் செய்யப்பட்ட உடல்கள்; கலங்கிய மணிப்பூர்

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
total of 87 person were buried in Manipur after 8 months

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. 

இந்த வன்முறையைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். பல மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன. இருப்பினும், சில மாவட்டங்களில் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், அங்கு மட்டும் விதிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது. ஆனாலும், இன்னும் சில இடங்களில் அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 

இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள திங்கங்பாய் கிராமத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தருண் குமார், சூரசந்த்பூர் மாவட்டம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த 144 தடை உத்தரவு வரும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்தார். 

total of 87 person were buried in Manipur after 8 months

இந்நிலையில், வன்முறையில் உயிரிழந்த குக்கி சமூகத்தைச் சேர்ந்த 87 பேரின் உடல்கள்  8 மாதங்களுக்குப் பிறகு சூரசந்த்பூரில் உள்ள செக்கனில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வன்முறை தொடர்ந்ததால் இறந்தவர்களின் உடல்களைத் தராமல் அரசே வைத்திருந்த நிலையில், தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் சமூக ஆர்வலர்கள், கிராம மக்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே இடத்தில் மொத்தமாக 87 பேரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்