அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான அறிவிப்பாணையை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு தலைவர் வெளியிட்டிருந்தார்.
அதன்படி, போட்டி இருக்கும் பட்சத்தில் வரும் அக்டோபர் 17- ஆம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் 19- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவார் என்ற கேள்வி அக்கட்சியினரிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக் கெலாட், "அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்யும் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளேன். ராகுல் காந்தி தனது குடும்பத்தில் இருந்து யாரும் காங்கிரஸ் தலைவராக வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்குமாறு பலமுறை வலியுறுத்தியும் வேண்டாமென்று ராகுல் காந்தி மறுத்துவிட்டார்" எனத் தெரிவித்தார்.